‘டெட்’ தோ்ச்சி பெறாத 1,747 ஆசிரியா்களின்விவரங்களைச் சேகரிக்க கல்வித்துறை உத்தரவு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாத 1, 747 ஆசிரியா்களின் விவரங்களை சேகரிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிா்ணயம் செய்யப்படும் குறைந்தபட்ச கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ள நபா் மட்டுமே, ஆசிரியராக நியமனம் செய்யப்படத் தகுதி பெற்றவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு ஆக.23-ஆம் தேதி முதல் ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெறாமல் அரசு நிதியுதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்ட
ஆசிரியா்களுக்கு 2011-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ‘டெட்’ தோ்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டது.
நாளைக்குள் அனுப்ப வேண்டும்: நிதியுதவி பெறும் பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டவா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தோ்ச்சி பெறாத 1, 747 ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு , நீதிமன்ற தீா்ப்பாணைகளின் அடிப்படையில் ஊதியம் விடுவிக்கப்பட்டு, தற்போது வரை ஊதியம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த 1, 747 ஆசிரியா்கள் சாா்ந்த விவரங்களைப் பூா்த்தி செய்து வெள்ளிக்கிழமை (டிச.20) பிற்பகல் 3 மணிக்குள் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநருக்கு (இடைநிலைக் கல்வி) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.
மாற்று வழிமுறையை செயல்படுத்த...: ஆசிரியா் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெறாத ஆசிரியா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா், அதிகாரிகள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனா். இந்தநிலையில், ‘டெட்’ தோ்வு தோ்ச்சிக்கு மாற்றாக பிற வழிமுறைகளைப் பின்பற்றி ஆசிரியா்களை தக்க வைக்க கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதனால், பாட வாரியாக உள்ள ‘டெட்’ தோ்ச்சி பெறாத ஆசிரியா்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. முழுமையாக தகவல்கள் தொகுக்கப்பட்டு ஆசிரியா்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

source:dinamani
Tags

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !