தெரிந்து கொள்வோம் ! ஊரடங்கு உத்தரவு -144 வது சட்ட பிரிவு.

ஊரடங்கு உத்தரவு (curfew) சொல் பயன்பாடு

பிரெஞ்சு மொழியில் "'couvre-feu'" என்பது "நெருப்பை மூடுவது" என்று பொருள். அனைத்து விளக்குகளையும், மெழுகுதிரிகளையும் அணைக்கும் நேரத்தை இது குறிக்கப் பயன்பட்டது. இச்சொல் பின்னர் curfeu என்ற சொல்லாக இடைக்கால ஆங்கிலத்திலும், பின்னர் 'curfew" என்ற சொல்லாக நவீன ஆங்கிலத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரிட்டீஷ் இந்தியாவில், இந்திய விடுதலை இயக்க வீர்ர்களை ஒடுக்கும் வகையில் இச்சட்டங்கள் இயற்றப்பட்டன.ஊரடங்கு உத்தரவு எனில், காவல்துறையினர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பொதுமக்கள் வீட்டின் உள்ளேயே இருக்க வேண்டும் என்பது விதிமுறை. இந்த விதிமுறைகள் வன்முறைக் காலகட்டங்களில் நிலைமைகளைக் சமாளிக்கவும், சீரமைக்கவும் மிக உதவியாக இருக்கும். ஊரடங்கு உத்தரவு காலகட்டங்களில் முன்னதாக போலீஸ் அனுமதியின்றி மக்கள் நடமாடவோ, வீட்டை விட்டு வெளிவரவோ தடை விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுகின்றன, சந்தைகள், பள்ளிகள் மூடப்பட வேண்டும்.

144 தடை உத்தரவு -144 வது சட்ட பிரிவு

1861-ஆம் ஆண்டில் ராஜ்-ரத்னா E.F. டீபோ (Raj-Ratna E.F. Deboo IPS ) என்ற காவல் அதிகாரியே 144-வது பிரிவின் வடிவமைப்பாளர் ஆவார், அதன் மூலம் பரோடா மாநிலத்தில் அந்த நேரத்தில் மொத்தக் குற்றங்களைக் குறைத்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144


  1. தொல்லை அல்லது எதிர்பார்க்கப்படுகிற அபாயம் ஆகிய அவசர நிலைகளில் உத்தரவு பிறப்பிப்பதற்குள்ள அதிகாரம்
  2. இந்தப் பிரிவின் படியான கட்டளை ஒன்று நெருக்கடி நிலைகளிலும், அல்லது எவருக்கெதிராகக் கட்டளை குறிப்பிட்டனுப்பப்படுகிறதோ அவருக்கு முன்னறிவிப்பை, உரிய காலத்தில் சார்வு செய்வதற்குச் சூழ்நிலைகள் இடங்கொடாத சந்தர்ப்பங்களிலும் அவர் இல்லாமலேயே பிறப்பிக்கப்படலாம்.
  3. இந்தப் பிரிவின் படியான கட்டளையொன்று, குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது குறிப்பிட்ட இடம் அல்லது குறிப்பிட்ட அப்பகுதியில் அடிக்கடி வந்து போகிற அல்லது பார்க்க வருகிற பொதுமக்களுக்கு பொதுவாகக் குறிப்பிட்டு அனுப்பலாம்.
  4. இந்தப்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட கட்டளை எதுவும் அது பிறப்பிக்கப்பட்டதிலிருந்து இரண்டு மாதங்களுக்கு மேல் அமலில் இருத்தல் கூடாது.
  5. வரம்புரையாக, மனித உயிருக்கோ, ஆரோக்கியத்திற்கோ ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதற்காகாகவோ, கலகம் அல்லது சச்சரவு எதையும் தடுப்பதற்காகவோ, அவ்வாறு செய்வது அவசியமென மாநில அரசாங்கம் எண்ணுமானால், அது அறிவிப்பு மூலமாக, இந்தப் பிரிவின்படி நடுவரால் பிறபிக்கப்பட்ட ஒரு கட்டளையானது மாநில அரசின் கட்டளையில்லாதிருப்பின் எந்தத் தேதியில் முடிவடைந்திருக்குமோ அந்தத் தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு மேற்படாது மேற்சொன்ன அறிவிப்பில் அரசு குறிப்பிடலாகும் கால அளவுக்கு அந்தக் கட்டளை அமலில் இருக்க வேண்டுமென உத்தரவிடலாம்.
  6. நடுவர் எவரும் தம்மாலோ, தமக்குக் கீழமைந்துள்ள நடுவராலோ அல்லது தமக்கு முன்பிருந்தவராலோ பிறப்பிக்கப்பட்ட கட்டளை எதையும் முன்வந்தோ அல்லது அக்கட்டளையால் பாதிக்கப்பட்டவரின் விண்ணப்பத்தின் பெயரில் ரத்து செய்யலாம் அல்லது மாற்றலாம்
  7. மாநில அரசாங்கம், 4-வது உட்பிரிவின் வரையத்தின்படி தான் பிறப்பித்த கட்டளை எதையும் தானே முன்வந்தோ அல்லது இந்தக் கட்டளையால் பாதிக்கப்பட்டவரின் விண்ணப்பத்தின் பேரிலோ ரத்து செய்யலாம்.
  8. (5) ஆவது உட்பிரிவு அல்லது (6)-வது உட்பிரிவின்படி விண்ணப்பமொன்று கிடைக்கப்பெற்றதும், நிலவரத்திற்கேற்ப, நடுவரோ அல்லது மாநில அரசாங்கமோ, தம்முன் நேர்முகமாக அல்லது வாதுரைஞர் மூலமாக அந்தக் கட்டளையை எதிர்த்துக் காரணம் சொல்வதற்கு வாய்ப்பினை விண்ணப்பதாரருக்கு அளித்தல் வேண்டும், மற்றும் நிலவரத்திற்கேற்ப நடுவரோ அல்லது மாநில அரசோ அவ்விண்ணப்பத்தை, முழுவதுமோ ஒரு பகுதியையோ நிராகரிப்பாரானால் அவர் அல்லது அது அவ்வாறு செய்வதற்கான காரணங்களை எழுத்து மூலம் பதிவு செய்தல் வேண்டும்.


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் சந்தர்ப்பங்கள்

இன, சாதிக் கலவரங்கள், வன்முறை, சட்ட எதிர்ப்பு, முன்பாதுகாப்பு போன்ற காலங்களில் பிரிவு 144 ஆணை உரிய முறையில் வெளியிடப்பட வேண்டும் இந்தப்பிரிவின் படி வெளியிடப்படும் தடையாணை, பிரிவு 134ல் உள்ளபடி வெளியிடப்பட வேண்டும் எனக் கூறுகிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம்.

பிரிவு 134 என்ன கூறுகிறது ?

இந்த ஆணை சாத்தியமாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபருக்கு சம்மன் வழங்குவதன் மூலம் கொடுக்கப்பட வேண்டும்.
அப்படி சாத்தியம் இல்லாத பட்சத்தில், இந்த ஆணை ஒரு வெளியீட்டின் மூலம், மாநில அரசு வெளியிடும் விதிகளின் படி, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியும் விதத்தில் பொது இடத்தில் ஒட்டப்படுவதன் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.
இந்த தடை உத்தரவில் இருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள் தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பஸ்கள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

மீறினால் தண்டனை என்ன ?

இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 188. பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படியாமை:-

இந்த தடையை மீறி நடந்தால், இந்திய தண்டனை சட்டத்தின் 188–ம் பிரிவின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்படும். தடையை மீறியதால் மக்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவோருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.200 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

தடை உத்தரவை யாரும் மீறினால், மனித உயிருக்கு சேதம், சுகாதாரக் கேடு, கலவரம் ஏற்பட்டு பொது அமைதி குலைந்துபோனால் அவர்களுக்கு 6 மாத ஜெயில் தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

காவல்துறையின் கடமைகள்

Police Standing Order PSO No 703 Sec 6 (பி) இன் படி துப்பாக்கி சூடு, தடியடி போன்ற நிகழ்வுக்கு பின்னர் காவல் துறை உடனடியாக காயம்பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கவும், காயம்பட்டவர்களை உடனடியாக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லவும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Police Standing Order PSO No 705 உட்பிரிவு (எப்) ன் படி கலவரம் நடக்க வாய்ப்புள்ள இடத்தில் அவசர கால ஊர்தி ஆம்புலன்ஸ் ஒன்றும் முதலுதவி பெட்டகம் ஒன்றும் நிறுத்தி வைக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஒன்று நிறுத்தி வைப்பதால் கலவரக்காரர்கள் மனதில் அமைதி ஏற்பட வழிவகுக்கும்..

144 தடை உத்தரவு முதல்வரை கட்டுப்படுத்துமா?

அவரைக் கட்டுப்படுத்தாது. சட்டத்தை போடும் இறையாண்மை கொண்ட முதல்வருக்கு பொருந்தாது. 144 தடை உத்தரவை போடுவதே அரசு தானே? 144 போட்டால் 5 அல்லது 5 நபருக்கு மேல் ஒன்றுகூட கூடாது, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடமாட கூடாது. அப்படியானால் 4 போலீஸுக்கு மேல் அங்கு நடமாடாமல் இருப்பார்களா? அதைக் கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் போலீஸார் தானே? நூற்றுக்கணக்கில் போலீஸார் அங்கு போகிறார்களே?

144 தேவையா..?

தூக்குத் தண்டணையே தேவையில்லை என்ற வாதங்கள் இருக்கும் பொழுது, 144 தடையுத்தரவு தேவையா? என்பதும் வாதத்திற்குரியதே. இத்தடையுத்தரவு பெரும்பாலும் பொது மக்களின் அறப் போராட்டங்களுக்குகே தடை போடப்படுகிறது என்பதும், அதனால் மக்கள் படும் துயரங்களைப் பார்க்கும் பொழுது சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்ற சந்தேகத்தையே எழுப்புகிறது.

ஆதாரம் : வழக்கறிஞர் சி.பி. சரவணன்

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !