சீனாவில் கொரோனா பரவத் தொடங்கியபோது, நோய்ப் பரவலைக் குறைக்க பல்வேறுவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அதில் டெக்னாலஜியின் பங்கு அதிகம். மனிதத் தலையீடு இல்லாமல் டெக்னாலஜியின் உதவியைக் கொண்டு நோய்ப் பரவலின் தாக்கத்தை வெகுவாகக் குறைக்கலாம். எனவே, மக்கள் அனைவரையும் புதிய செயலி ஒன்றைப் பயன்படுத்த அறிவுறுத்தியது சீனா. இதன்மூலம் கொரோனா பாதித்த நபருக்கு அருகில் செல்ல நேர்ந்தால் மொபைலில் உள்ள செயலியின் மூலம், "நீங்கள் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான நபரின் அருகில் உள்ளீர்கள்" என நமக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதேபோன்ற ஒரு செயலியை இந்தியாவும் உருவாக்கி மக்கள் பயன்பாட்டிற்காக வெளியிட்டுள்ளது.
செயலியானது இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் 'National Disaster Management Authority'-ன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அந்தச் செயலியில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட 11 மொழிகள் உள்ளன.
செயலி எப்படி இயங்குகிறது:
ஆரோக்கிய சேது செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் இதோ.
ஆண்ட்ராய்டு:
ஐ.ஒ.எஸ்: https://apple.co/2X1KMzO
செயலியின் உள்ளே சென்றவுடன் எந்த மொழியில் செயலி இயங்க வேண்டும் என ஒரு பட்டியல் தோன்றும், அதில் தமிழைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். (அல்லது உங்களுக்கு வசதியான மொழியைத் தெரிவு செய்துகொள்ளவும்)
பின்னர் இந்தச் செயலி எதற்காக உபயோகப்படுகிறது, எப்படிச் செயல்படுகிறது என்பதைத் தெரிவிக்கும் வகையில் விரிவான எடுத்துரைக்கப்படும். அதன் முடிவில் உங்கள் மொபைலில் ப்ளூடூத்தை இயக்குவதற்கான அனுமதியைக் கேட்டும். அதற்கான அனுமதியைக் கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் தோன்றும் பக்கத்தில், செயலியின் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் பற்றிய விளக்கம் இருக்கும். அதைப் படித்துவிட்டு, அதன் கீழ் உள்ள 'நான் ஒப்புக்கொள்கிறேன்' என்ற பொத்தானை க்ளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் நம் மொபைலின் இருப்பிடத்தை அறிந்து கொள்வதற்கான அனுமதியையும், GPS-ஐ இயக்குவதற்கான அனுமதியையும் கேட்கும். அதற்கான அனுமதியைக் கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் தோன்றும் திரையில் உங்கள் மொபைல் எண்ணைக் கொடுத்து, பின் மொபைலுக்கு வரும் OTP எண்ணையும் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.
செயலியின் உள்ளே, நம் பெயர், கடந்த சில மாதங்களில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்திருக்கின்றோமா போன்ற தகவல்கள் கேட்கப்படும். அதைக் கொடுக்க வேண்டும்.
இதன் பின்னர், நீங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நபரின் அருகில் சென்றால் நமக்கு செயலியின் மூலம் எச்சரிக்கை செய்யப்படும்.
இந்தச் செயலி GPS மற்றும் Bluetooth-ன் சேவையைக் கொண்டு செயல்படுவதால் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகி இருக்கும். இதன் மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது. எவ்வளவு அதிகமான மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.