இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டில் சேர இதுவரை 29 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்!

 


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 12(1) (சி)-ன்படி, சிறுபான்மை அல்லாத அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு எல்கேஜி அல்லது 1-ம் வகுப்புகளில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு மாணவர் சேர்க்கை வழங்கப்பட வேண்டும். 

தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமார் 1.12 லட்சம் இடங்கள் உள்ளன. வரும் 2020-21 ஆம் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் எல்கேஜி அல்லது முதல் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் செப். 25-ம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 




விண்ணப்பிக்கும்போது புகைப்படம், பிறப்புச் சான்று அல்லது பிறப்புச் சான்றிதழுக்கான பிற ஆவணம், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ்), வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரில் முன்னுரிமை கோரும் நபர்கள் உரிய அலுவலரிடம் பெறப்பட்ட நிரந்தர ஆவணங்களின் நகல், சாதிச் சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யவேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள எட்டாயிரத்து 628 நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 1,15,771 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்காக செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தற்போது வரை 29,000 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.மாணவர்கள் விண்ணப்பம் செய்யும்பொழுதே, அவர்கள் வசிக்கும் பகுதிக்கும் பள்ளிக்கும், இடையே ஒரு கிலோ மீட்டருக்கு குறைவான தூரம் உள்ள பள்ளிகளில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் அக்டோபர் 3-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !