அறிந்து கொள்வோம்!- சி.பி.எஸ்.இ கல்வி வாரியம் (Central Board of Secondary Education )

 சி.பி.எஸ்.இ கல்வி வாரியம்

       


அறிமுகம் 

சி.பி.எஸ்.இ கல்விமுறையில் தங்களது பிள்ளைகள் படிப்பதை பெருமையாக கருதும் பெற்றோர்கள் மிக அதிகம். அதனால் எதிர்கால வாழ்வு வளம்பெறும் என்ற எண்ணமும் வலுவாக உள்ளது. எனவே, அந்த சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் வரலாற்றைப் பற்றி அறிந்துகொள்வது பலருக்கும் நல்லதுதானே! இக்கட்டுரை அதற்கான அலசலை மேற்கொள்கிறது.

சி.பி.எஸ்.இ என்ற கல்வி வாரியம், இன்றைய நிலையை அடைவதற்கு முன்பாக பல மாற்றங்களைக் கண்டுள்ளது. கடந்த 1921ம் ஆண்டு, முதன்முதலாக, உயர்நிலைப் பள்ளி மற்றும் இண்டர்மீடியேட் கல்விக்கான U P வாரியம் ஏற்படுத்தப்பட்டது. ராஜ்புதனா, மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளில் மட்டுமே இந்த வாரியம் இயங்கியது. 

1929ம் ஆண்டு, அப்போதைய இந்திய அரசாங்கம், உயர்நிலைப் பள்ளி மற்றும் இண்டர்மீடியேட் கல்வி, ராஜ்புதனா, என்ற பெயரில், அனைத்துப் பகுதிகளுக்குமான ஒரு கல்வி வாரியத்தை ஏற்படுத்த பரிந்துரைத்தது. இந்த வாரியமானது, ஆஜ்மீர், மார்வார், மத்திய இந்தியா மற்றும் குவாலியர் ஆகிய பகுதிகளில் இயங்கத் தொடங்கியது.

இந்தக் கல்விமுறையை, உயர்நிலைக் கல்வி நிலையில் பரவலாக பயன்படுத்தியதால், கல்வி நிறுவனங்களின் கல்வி செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. நாட்டின் பல பகுதிகளில் பல பல்கலைக்கழகங்களும், பல பள்ளிக் கல்வி வாரியங்களும் தோன்ற ஆரம்பித்த காலங்களில், இந்த வாரியத்தின் செயல்பாடு ஆஜ்மீர், போபால் மற்றும் விந்தியப் பகுதிகள் ஆகியவற்றில் மட்டுமே இருந்தது. இந்நிலையில், கடந்த 1952ம் ஆண்டு, இதன் செயல்பாடு C மற்றும் D பிரிவைச் சேர்ந்த பகுதிகளிலும் விஸ்தரிக்கப்பட்டது.

அப்போதுதான் இந்த வாரியத்திற்கு CBSE என்ற பெயரும் வந்தது. மேலும், 1962ம் ஆண்டில்தான் இந்த வாரியம் மறுஉருவாக்கம் செய்யப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு சிறந்த முறையில் உதவி புரிவது மற்றும் அடிக்கடி பணி மாற்றல்களுக்கு உள்ளாகும் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளுடைய கல்வித் தேவைகளை ஈடுசெய்தல் போன்றவை இந்த வாரியத்தின் முக்கிய நோக்கங்கள்.

வாரியத்தின் இன்றைய செயல்பாடு

இந்த வாரியத்தின் இன்றைய செயல்பாட்டு எல்லையானது, தேசிய மற்றும் புவியியல் எல்லைகளைக் கடந்து வியாபித்துள்ளது. இந்தக் கல்வி வாரியத்தை மறுஉருவாக்கம் செய்ததால், அப்போதைய Delhi Board of Secondary Education, மத்திய வாரியத்துடன் இணைக்கப்பட்டது.

 இதனால், டெல்லி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும், மத்திய வாரியத்தின் அங்கங்கள் ஆயின. பின்னர், சண்டிகர், அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஜார்க்கண்ட், உத்ரகாண்ட் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய இடங்களிலுள்ள அனைத்துப் பள்ளிகளும், இந்த வாரியத்தின் அங்கீகாரத்தைப் பெற்றன.

கடந்த 1962ம் ஆண்டு வெறும் 309 பள்ளிகளைக் கொண்டிருந்த இந்த வாரியம், 31-03-2007 காலகட்டம் வரை, 8979 பள்ளிகளைக் கொண்டிருந்தது. இவற்றில், 21 வெளிநாடுகளிலுள்ள 141 பள்ளிகளும் அடக்கம்.

 மற்றபடி, 897 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், 1761 அரசுப் பள்ளிகளும், 5827 தனி பள்ளிகளும், 480 ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளும் மற்றும் 14 மத்திய திபெத்தியன் பள்ளிகளும் அடங்கும்.

நிர்வாகப் பிரிவுகள்

இந்த வாரியத்தின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி, நாடெங்கும் பரந்திருக்கும் பள்ளிகளின் தேவையை சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கு, இந்த வாரியத்தின் பல பிராந்திய அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

 இந்த வாரியத்தின் பிராந்திய அலுவலகங்கள், டெல்லி, அலகாபாத், சென்னை, ஆஜ்மீர், குவஹாத்தி மற்றும் பன்ச்குலா போன்ற இடங்களில் உள்ளன. இந்தியாவிற்கு வெளியே இருக்கும் CBSE பள்ளிகள், டெல்லியிலுள்ள பிராந்திய அலுவலகத்தால் கவனிக்கப்படுகின்றன.

பிராந்திய அலுவலகங்களுக்கென்று குறிப்பிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், அதன் செயல்பாடுகள், தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்பட்டு, முறைப்படுத்தப்படுகின்றன. 

கொள்கை ரீதியிலான முடிவகள் அனைத்தும், தலைமை அலுவலகத்துடன் கலந்துரையாடியே எடுக்கப்பட முடியும். மற்றபடி, அன்றாட நிர்வாகங்கள், பள்ளிகளுடனான தொடர்புகள் மற்றும் தேர்வுக்கு முந்தைய மற்றும் பிறகான ஏற்பாடுகள் உள்ளிட்ட செயல்பாடுகளை, பிராந்திய அலுவலகங்களே கையாளும்.

நிதி கட்டமைப்பு

CBSE வாரியம் ஒரு சுயநிதி அமைப்பு. அடிக்கடி ஏற்படும் செலவினங்கள் மற்றும் எப்போதாவது ஏற்படும் செலவினங்கள் ஆகியவற்றுக்கான நிதியை, மத்திய அரசு அல்லது வேறு எந்த ஆதாரங்களிலிருந்தும் இந்த வாரியம் பெறுவதில்லை. அனைத்துவித நிதி தேவைகளும், வருடாந்திர தேர்வு கட்டணங்கள், அங்கீகார-இணைப்பு கட்டணங்கள், PMT(Pre Medical Test) -க்கான சேர்க்கை கட்டணம், ஏஐஇஇஇ தேர்வுகள் மற்றும் வாரிய வெளியீடுகள் ஆகியவற்றிலிருந்தே திரட்டப்படுகின்றன.

நடவடிக்கைகள் மற்றும் நோக்கங்கள்

  •     பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான இறுதித் தேர்வுகளை நடத்துதல் மற்றும் அத்தேர்வு நடைமுறைகளை உருவாக்குதல். அத்தேர்வுகளில் தேறிய இணைப்பு பள்ளிகளின் மாணவர்களுக்கு, தகுதி சான்றிதழ்களை வழங்குதல்.
  •     அடிக்கடி பணிமாற்றத்திற்கு உள்ளாகும் பெற்றோர்களுடைய குழந்தைகளின் கல்வித் தேவைகளை நிறைவுசெய்தல்.
  •     நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், தேர்வுகளுக்காகவும், கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கி இணைத்துக் கொள்ளுதல்.

பிரதானப் பணிகள்

  1.     மாணவர் நலன் சார்ந்த மற்றும் மாணவர்களை மையப்படுத்திய                     கற்பித்தல் திட்டங்களை உருவாக்குதல்.
  2.     தேர்வு மற்றும் திருத்துதல் செயல்முறைகளை சீர்திருத்துதல்
  3.     பணி தொடர்பான மற்றும் பணித் திறன்கள் இணைந்த கற்றல்                         முறைகளை பயன்படுத்தல்.
  4.     பயிற்சி திட்டங்கள் மற்றும் பயிற்சி பட்டறைகளை தொடர்ச்சியாக        செயல்படுத்தி, இந்த வாரியத்தின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளின் திறனை மேம்படுத்தல்.#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !