IQ வை அதிகப்படுத்துவது எப்படி?

IQ வை அதிகப்படுத்துவது எப்படி?

அறிவு என்பது பொதுவாக சில நிர்ணயிக்கப்பட்ட சோதனைகளால் அளக்கப்படுகிறது. இந்த சோதனை தரும் அளவே இன்டலிஜென்ஸ் கோஷண்ட் அல்லது ஐ.க்யூ என்று கூறப்படுகிறது.


ஒரு குழந்தையின் ஐ.க்யூ என்பது எவ்வாறு கூறப்படுகிறது? அந்த குழந்தையின் மன வயதை நிஜ வயதால் வகுத்து வருவதை நூறால் பெருக்க வேண்டும். உதாரணமாக ஒரு பையனின் மன வயது எட்டு என்றும் அவனது நிஜ வயதும் எட்டு என்றால் எட்டை எட்டால் வகுத்து வரும் எண்ணிக்கையான ஒன்றை நூறால் பெருக்கி வருவது நூறாகும்.அதாவது அந்த குழந்தையின் ஐ.க்யூ நூறாகும்.

இன்னொரு உதாரணம்: ஒரு குழந்தையின் மன வயது 12 என்றும் அவன் நிஜ வயது எட்டு என்றும் வைத்துக் கொண்டால் 12ஐ 8ல் வகுத்து வரும் தொகையான 1.5ஐ நூறால் பெருக்க வருவது 150 ஆகும். அப்போது அந்தக் குழந்தையின் ஐ.க்யூ 150 ஆகும். மன வயது என்பது சில சோதனைகளால் நிர்ணயிக்கப்படுகிறது.

அறிவு 17 வயது வரை அதிகரிக்கிறது. பிறகு பொதுவாக குறிப்பிடத்தகுந்த வகையில் அதிகரிப்பதில்லை. ஆகவே பெரும்பாலான நாடுகளில் ஒரு பையன் 18 வயதில் வயதுக்கு வந்து விட்டவனாக அல்லது முதிர்ச்சி அடைந்தவனாகக் கருதப்படுகிறான். ஆகவே தான் 18 வயதில் போர்க்களங்களில் சண்டையிட்டு இறந்து போகவும் கூட அனுமதிக்கப்படுகிறான். 

சாதாரணமாக வளர்ந்து விட்ட ஒருவனின் வயது அவனது வயது எதுவாக இருந்தாலும் கூட 16 என எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆகவே வளர்ந்து விட்ட ஒரு பையனின் ஐ.க்யூ என்பது அவனது மன வயது x 100 / 16 என்றாலும் கூட இந்த மனவயது என்ற கருத்து சர்ச்சைக்குரியதாக ஆகி விட்டது. ஆகவே இப்போது ஐ.க்யூ என்பதை புள்ளிவிவரங்களின் பிரதிநிதித்துவ அடிப்படையில் இந்த வயதில் இந்த அளவு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

அறிவை நிர்ணயிக்கும் சோதனைகளின் அளவு அது பகுத்தளிக்கப்படும் வளைவில் (distribution curve) நடுவில் வரும் வரை சராசரி என்ற அளவிலும் நடுப்பகுதியைத் தாண்டிவிட்டால் வெகுவேகமாக கீழேயும் இறங்குகிறது. மூன்றுக்கு இரண்டு அளவுகள் 85க்கும் 115க்கும் இடையில் உள்ளன.இந்த நிலையில் உள்ளவர்கள் தான் பெரும்பாலானோர். இருபதுக்கு பத்தொன்பது அளவுகள் 70க்கும் 130க்கும் இடையில் உள்ளன. ஐ.க்யூ. 130 உள்ளவர்கள் மேதைகள் என்றும் ஐ.க்யூ. 70க்கும் குறைவாக ஆக ஆக மக்கு என்பதில் ஆரம்பித்து ஐ.க்யூ 29 என்பதில் முடியும் போது மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் இரண்டு வயதுக்கும் கீழாக உள்ள குழந்தையின் மனநிலையில் உள்ளவர்கள் என்றும் கூறப்படுகின்றனர்.

அறிவை ஒரு வரையறுப்பிற்குள் அடக்க முடியாது. புத்திசாலித்தனம், ஞானம், அறிவால் புதிர்களையும் பிரச்சினைகளையும் விடுவிக்கும் தன்மை, பகுத்தாளும் தன்மை மற்றும் கற்பனை வளம் என்றெல்லாம் அறிவைப் பற்றித் தங்கள் பார்வைக்குத் தக்கபடி மக்கள் கூறுகின்றனர். ஆனால் உளவியலாளர்களோ இது போன்ற தியரிகளுக்கெல்லாம் மசிவதில்லை. அவர்கள் அறிவுச் சோதனை எனப்படும் இன்டெலிஜென்ஸ் டெஸ்ட் நடத்தி ஒருவரின் ஐ.க்யூவைத் தீர்மானிக்கின்றனர்.

47 வயதான ஆல்ஃப்ரட் பைனட் என்ற பிரெஞ்சு உளவியலாளர் சாதாரண குழந்தைகளிடமிருந்து மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பிரித்து இனம் காண்பதற்காக ஒரு சோதனையை அறிமுகப்படுத்தினார். 1905ல் அறிமுகப்படுத்தப்பட்ட இதுவே முதலாவது இன்டெலிஜென்ஸ் டெஸ்ட்.

மனோசக்தி, புதியன கண்டுபிடித்தல், வழிகாட்டல், விமரிசனம் (comprehension, invention, direction and criticism ) ஆகிய நான்கோடு அறிவை பைனட் தொடர்பு படுத்திக் கூறி ஒரே வார்த்தையில் அதை ஜட்ஜ்மென்ட் என்று முடித்து விட்டார்.

டாக்டர் காதரீன் மோரிஸ் நன்கு விவரங்கள் குறிக்கப்பட்ட மேதைகளின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்து அவர்களது ஐ.க்யூவை மதிப்பீடு செய்துள்ளார்.

மொஜார்ட் ஆறு வயதிலேயே இசைக் கருவிகளை அற்புதமாக வாசித்தார். கதே எட்டு வயதிலேயே கவிதையை எழுதினார். ஆக இப்படி நன்கு விவரங்களை ஆராய்ந்த பின்னர், அவர் அளிக்கும் பிரபலங்களின் ஐ.க்யூ வைக் கீழே காணலாம்:

  • ட்ரேக் 130
  • க்ராண்ட் 130
  • வாஷிங்டன் 140
  • லிங்கன் 150
  • நெப்போலியன் 145
  • ரெம்ப்ராண்ட் 155
  • ஃப்ராங்க்ளின் 160
  • கலிலியோ 185
  • லியனார்டோ டா வின்சி 180
  • மொஜார்ட் 165
  • வால்டேர் 190
  • டெஸ்கார்டஸ் 180
  • ஜான்ஸன் 165
  • லூதர் 170
  • நியூட்டன் 190
  • கதே 210
  • காண்ட் 175.

உலக ஜனத்தொகையில் ஒரு சதவிகிதம் பேரே 140க்கு மேற்பட்ட ஐ.க்யூவைக் கொண்டுள்ளனர். பிரபலங்களின் சராசரி ஐ.க்யூ 166!

சரி, ஐ.க்யூவை அதிகப்படுத்துவது என்பது சாத்தியமான ஒன்றா? சாத்தியமானது தான். அறிவு மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

1) ஜீன்ஸ் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் மூளை அறிவு

2) சோதனைக்குட்பட்ட அறிவு. இது கற்பதால் வருவது.

3) ரெப்ளக்டிவ் அறிவு இதுவும் கற்பதால் வருவது.

ஆக முதல் இனத்தைத் தவிர மற்ற இரண்டையும் வளர்ப்பது சாத்தியமானதே. புதிர், புதிர்கணக்கு ஆகியவற்றை விடுவிப்பது கற்பனை வளத்தைப் பெருக்குவது பற்றிய பயிற்சிகள், காபி போன்ற ஊக்கிகளை அருந்துவது தற்காலிகமாக ஐ.க்யூவை அதிகரிக்கும். ஆழ்ந்து உள்ளிழுத்து மூச்சு விடுதலும் நல்ல பயனைத் தரும்.

நிரந்தர பயனை எதிர்பார்ப்போர் மனப் பயிற்சிகளையும் உடல் பயிற்சிகளையும் செய்வதன் மூலம் மூளை ஆற்றலைக் கூட்டி ஐ.க்யூவை அதிகரிக்க முடியும். இவை மிக அதிக வயதாகும் போது இயல்பாக மூளையின் ஆற்றல் குறைவதைக் கூடத் தடுக்க வல்லவை! எந்த மனப்பயிற்சிகளைச் செய்வது? உங்கள் மனம் எதில் நேரம் போவது தெரியாமல் லயிக்கிறதோ அதுவே சிறந்தது. அதற்காக டி.வி, பார்க்கிறேன் என்றால் அது மனப்பயிற்சியே இல்லை. ஆனால் கிராஸ் வோர்ட் பஜில்-குறுக்கெழுத்துப் போட்டி ஒரு நல்ல பயிற்சி. வார்த்தை விளையாட்டு, தத்துவ விசாரணை அல்லது விவாதம், மனதால் செய்யப்படும் கணக்குகள் இவற்றோடு அன்றாடம் எதையேனும் புதிதாக வடிவமைப்பது அல்லது வடிவமைக்கப்பட்டதை அபிவிருத்தி செய்வது ஆகிய இவையெல்லாம் சிறந்த மனப்பயிற்சிகள்.

உடல் பயிற்சி வகையில் டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து ஆகியவை சிறந்தவை. ஏனெனில் எதில் ஒருங்கிணைப்பு மற்றும் நேரத்திற்குச் செய்வது (Coordination and timing) ஆகிய இரண்டும் இணைகின்றனவோ அவையெல்லாமே சிறந்த உடல் பயிற்சிகள் தான்.ஒரு நல்ல கார்டியோவாஸ்குலர் அமைப்பானது (cardiovascular system) நல்ல ரத்த ஓட்டத்தாலேயே ஏற்படும். நல்ல ரத்த ஓட்டமே மூளைக்குத் தேவையான அதிக ஆக்ஸிஜனை ரத்தத்தில் எடுத்துச் செல்லும். ஆகவே தான் அறிவியல் இவற்றைச் சிறந்ததாக சிபாரிசு செய்கிறது. இவை நிலையான மாற்றத்தை மூளையில் ஏற்படுத்தும் என்பது ஒரு சுவையான செய்தி! ஒருங்கிணப்பு மற்றும் டைமிங் ஆகிய இரண்டும் வாசிப்பிற்குத் தேவையான இசைக்கருவிகளை வாசித்தல்,(பியானோ,ஆர்மோனியம் போன்றவை) ஒரு நல்ல பயிற்சி. இத்தோடு கண்களையும் கைகளையும் ஒரு சேரப் பயன்படுத்த வேண்டிய ஓவியம் வரைதலையும் மரவேலை செய்தல் போன்றவற்றையும் செய்யலாம்.

தியானம் செய்வது மூளை ஆற்றலை நிரந்தரமாகக் கூட்ட வல்லது. ப்ரீப்ரண்டல் கார்டெக்ஸ் மற்றும் வலது ஆன்டீரியர் இன்சுலா ஆகிய உணர்வுகளை அறியச் செய்யும் கார்டெக்ஸ் பகுதியின் கனத்தை இது அதிகரிக்கிறது.

ஆக, ஐ.க்யூ குறைவு என்று யாருமே பயப்படத் தேவை இல்லை. பயிற்சியால் கூட்டக் கூடிய அதிக பட்ச அளவை அடைய மனமிருந்து, பயிற்சிகளை விடாது மேற்கொள்ளும் விடாமுயற்சியும் இருந்தால் ஐ.க்யூ கூடுவது நிச்சயம்!

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !