அறிந்து கொள்வோம் - உரம் மற்றும் வகைகள்!| Types of Fertilizer

உரம் மற்றும் உரமேம்பாடு

ஊட்டச்சத்துக்கள்

பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கும் அங்கக மற்றும் அனங்கக பொருட்களுக்கு உரம் என்று பெயர். தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணுரட்டச்சத்துக்கள் என இருவகைகளாகப் பிரிக்கலாம்.

பேரூட்டச்சத்துக்கள் (Macronutrients)

தாவரங்களின் வளர்ச்சி மற்றும் உற்பத்திக்கு அதிக அளவில் தேவைப்படும் சத்துக்கள் பேரூட்டச்சத்துக்களாகும்.

அவையாவன :

  • கார்பன் (C),

  • ஹைட்ரஜன் (H),

  • ஆக்ஸிஜன் (O),

  • நைட்ரஜன் (N),

  • பாஸ்பரஸ் (P),

  • பொட்டாசியம் (K),

  • கால்சியம் (Ca),

  • மக்னீசியம் (Mg),

  • கந்தகம் (S).

இச்சத்துக்களை தாவரங்கள் மண், நீர் மற்றும் காற்றிலிருந்து பெற்றுக் கொள்கின்றன.

நுண்ணுரட்டச் சத்துக்கள் (Micronutrients)

பயிர் வளர்ச்சிக்கு மிகக் குறைந்த அளவில் ஆனால் அத்தியாவசியமாகத் தேவைப்படும் சத்துக்கள் நுண்ணூட்டச் சத்துக்கள் எனப்படும்.


அவையாவன:

  • இரும்பு (Fe),

  • மாங்கனீசு (Mn),

  • துத்தநாகம் (Zn),

  • தாமிரம் (Cu),

  • போரான் (B),

  • மாலிப்டினம் (Mo)

  • குளோரின் (C).

  • சோடியம் (Na),

  • சிலிக்கான் (Si),

  • அயோடின் (),

  • ப்ளூரின் (F),

  • கோபால்ட் (Co),

  • செலினியம் (Se),

  • அலுமினியம் (Al),

  • வெனடியம் (V)

போன்ற தனிமங்களும் பயிர் வளர்ச்சிக்கு சிறிதளவு தேவைப்படுகின்றன

.



கார்பன்

  1. பயிர்கள் கார்பனை கார்பன்டை ஆக்ஸைடு (CO) வடிவத்தில் வளிமண்டலத்திலிருந்து கிரகித்துக் கொள்கின்றன.

  2. உணவு தயாரிக்கவும், புரோட்டோபிளாசம் மற்றும் செல் சுவர் உற்பத்திக்கும் கார்பன் தேவைப்படுகிறது.

ஹைட்ரஜன்

  1. பயிர்கள் இச்சத்தினை நீரிலிருந்து பெறுகின்றன.

  2. இது தாவரத்தின் உடற்செயலியல் நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆக்ஸிஜன்

  1. நீர் மற்றும் வளிமண்டலத்திலிருந்து இச்சத்து தாவரங்களுக்கு கிடைக்கிறது.

  2. இச்சத்து தாவரங்கள் உயிர் வாழவும், உடற்செயலியல் நிகழ்ச்சிகள் நடைபெறவும் பயன்படுகிறது.

நைட்ரஜன் அல்லது தழைச்சத்து (Nitrogen - N)

  1. தாவரத்தின் அனைத்து செல்கள் மற்றும் புரோட்டோபிளாசத்தில் நைட்ரஜன் உள்ளது.

  2. பயிர்களுக்கு பசுமை நிறத்தைக் கொடுப்பதுடன், அவற்றின் தரம் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

  3. தாவரத்தின் புரதச் சத்தின் அளவை அதிகரிக்கிறது.

  4. இச்சத்தின் அளவு அதிகரிப்பால் தாவரத்தின் வளர்ச்சி கூடுவதுடன், பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது.

பாஸ்பரஸ் அல்லது மணிச்சத்து (Phosphorus - P)

  1. தாவரத்திலுள்ள நியூக்ளிக் அமிலம் மற்றும் பாஸ்போலிப்பிடுகளில் பாஸ்பரஸ் சத்து அதிக அளவில் உள்ளது.

  2. விதை முளைக்கவும், வேர்கள் மற்றும் மலர்கள் தோன்றுவதற்கும் இச்சத்து தேவை.

  3. பயிர் முதிர்ச்சி அடைவதற்கும், தானியங்களின் தரம் மற்றும் எண்ணிக்கை அதிகரிக்கவும் இச்சத்து அவசியம்.

  4. வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் அவரை (Legume) குடும்பப் பயிர்களில் வேர் முடிச்சுகளில் நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளை அதிகரிக்கிறது.

பொட்டாசியம் அல்லது சாம்பல் சத்து (Potassium - K)

  1. தாவரத்திலுள்ள கூட்டுப்பொருள் எதிலும் பொட்டாசியம் பங்கேற்காமல் தனித்து அயனியாக காணப்படும்.

  2. பூச்சி மற்றும் நோய்களை எதிர்க்கவும், வறட்சியைத் தாங்கவும் பயிர்களுக்கு இச்சத்து தேவை.

  3. கனிகள் மற்றும் விதைகளின் தரத்தை அதிகரிக்க உதவுகிறது.

கால்சியம்

  • தாவரங்களின் செல்சுவர் தோன்றவும், ஆரம்ப வேர் வளர்ச்சிக்கும், தீங்கு விளைவிக்கும் அமிலங்களின் தன்மையை நீக்கவும் கால்சியம் சத்து பயன்படுகிறது.

  • பயிர் நைட்ரஜனை கிரகித்துக் கொள்ளவும், நைட்ரஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியாக்களின் செயலை அதிகரிக்கவும் இச்சத்து அவசியம்.

  • இது பயிரினூடே நகர்ந்து செல்லும் தன்மை அற்றது.

மெக்னீசியம் (Magnesium - Mg)

  • தாவரத்திலுள்ள பச்சையத்தில் மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. இது ஊட்டப் பொருட்களை உறிஞ்சும் திறனை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

  • தாவரத்திலுள்ள பாஸ்பரஸ் சத்தை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டுசெல்லப் பயன்படுகிறது.

  • விதைகளின் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்க மெக்னீசியம் உதவுகிறது.

கந்தகம்

  • தாவரத்தில் பச்சையம் மற்றும் புரதம் தோன்றுவதற்கு உதவுகிறது.

  • விதை உற்பத்தி, வேர் வளர்ச்சி மற்றும் வேர் முடிச்சுகள் தோன்றுவதற்கும் கந்தகம் தேவை.

இரும்பு

  • பச்சையம் தோன்றுவதற்கும், மண்ணிலுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் இரும்புச்சத்து தேவை.

  • தாவரத்தில் நடைபெறும் ஆக்ஸிகரண வினைகளுக்கான என்சைம்கள் தோன்றவும், புரத உற்பத்திக்கும் இரும்புச்சத்து அவசியமாகும்.

மாங்கனீசு

  • தாவரத்தில் பச்சையம் தோன்றுவதற்கு மாங்கனீசு உதவுகிறது.

  • தாவரத் திசுக்களில் நடைபெறும் ஆக்ஸிகரண வினைகளை ஊக்குவிக்கும் காரணியாக விளங்குகிறது.

துத்தநாகம்

  • தாவரத்தில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றங்களுக்கான என்சைம்களை தோற்றுவிக்க துத்தநாகம் தேவை.

  • பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஆக்ஸின் (Auxin) ஹார்மோன் உருவாக முக்கிய காரணியாக செயல்படுகிறது.

தாமிரம் (Copper – Cu)


தாவரங்கள் பச்சையம் தயாரிக்கவும், ஆக்ஸிகரண வினையூக்கியாகவும் தாமிரம் செயல்படுகிறது.


போரான்

  • தாவரம் கால்சியத்தை கிரகித்துக் கொள்ளவும், பயன்படுத்தவும், அதன் கரையும் திறனை நிலையாக வைத்திருக்கவும் போரான் உதவுகிறது.

  • தாவரத்திலுள்ள பொட்டாசியம், கால்சியம் ஆகியவற்றின் விகிதத்தை ஒரே சீராக வைத்திருக்க பயன்படுகிறது.

  • மகரந்தத்துள்களின் வீரியத்தை அதிகரிக்கச் செய்கிறது.

  • சர்க்கரைச்சத்து உருவாகவும், அது பயிரினுாடே இடம் பெயர்ந்து செய்யவும் உதவுகிறது.

மாலிப்டினம்

  • வாயு மண்டல நைட்ரஜனை நிலைநிறுத்த நேரடியாகவோ, மறைமுகமாகவோ மாலிப்டினம் பயன்படுகிறது.

  • ஆக்ஸிகரண வினைகளுக்கான என்சைம்கள் தோன்ற இச்சத்து தேவை.

குளோரின்

  1. தாவர வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஊட்டப்பொருளாக குளோரின் உள்ளது.

  2. பயிர்களின் அயனிகள் சமன்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

மேற்கூறிய பேரூட்ட மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறை மண்ணில் ஏற்படும்போது, அவற்றை ஈடுசெய்ய உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஊட்டச்சத்துக்களின் நிலை, எண்ணிக்கை மற்றும் தன்மையைப் பொறுத்து உரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.

ஊட்டச்சத்துக்களின் நிலையைப் பொறுத்த வகைப்பாடு



கரிம உரம் (Organic Fertilizer)

மண்ணின் இயற்பியல் பண்புகளை அதிகரிக்க, அதிக அளவு சேர்க்கப்படும் கரிமத்தை (C) கொண்டுள்ள இயற்கைப் பொருளே கரிம உரம் அல்லது இயற்கை உரம் எனப்படும். உம். தொழுஉரம், கம்போஸ்ட், பசுந்தாள் உரம், உயிர் உரம்.

கனிம உரம் (Inorganic Fertilizer)

பயிருக்குத் தேவையான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளிக்கும் செயற்கைப் பொருளுக்கு கனிம உரம் அல்லது செயற்கை உரம் என்று பெயர்.

உம், யூரியா, டைஅம்மோனியம் பாஸ்பேட், ஃபெர்ரஸ் சல்பேட்

ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கையைப் பொறுத்த வகைப்பாடு

நேரடி உரம் (Straight Fertilizer)

பேரூட்டச்சத்துக்களில் ஏதாவது ஒன்றை மட்டும் அளிக்கும் உரம் நேரடி உரம் எனப்படும். .ம். யூரியா – தழைச்சத்து சூப்பர் பாஸ்பேட் – மணிச்சத்து மியூரேட் ஆப்பொட்டாஷ்-சாம்பல் சத்து

கலப்பு உரம் (Mixed Fertilizer)

இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட நேரடி உரங்கள் சேர்ந்த கலவைக்கு கலப்பு உரம் என்று பெயர். கலப்பு உரம் தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் மூன்றையும் அளித்தால் அது முழுமையான உரம் எனப்படும்.

.ம். NO. 10 கலப்பு உரம், No. 8 கலப்பு உரம்

கூட்டு உரம் (Complex Fertilizer)

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயிர் ஊட்டச்சத்துக்களை ரசாயன முறைப்படி சேர்க்கப்பட்ட உரத்திற்கு கூட்டு உரம் என்று பெயர்.

.ம். 17:1717 காம்ப்ளெக்ஸ், 19:1919 காம்ப்ளெக்ஸ்

உரங்களின் தன்மையைப் பொறுத்த வகைப்பாடு

அமில உரங்கள் (Acidic Fertilizers) நிலத்தில் இவ்வகை உரங்களை தொடர்ந்து இடுவதால் அமிலத்தன்மை அதிகரிக்கும். .ம். அம்மோனியம் சல்பேட், ஜிப்சம்.

கார உரங்கள் (Basic Fertilizers)

நிலத்தில் இவ்வகை உரங்களை தொடர்ந்து இடுவதால், காரத்தன்மையை ஏற்படுத்தி நிலத்தின் காரநிலையை அதிகரிக்கும். .ம். சோடியம் நைட்ரேட்

நடுநிலை உரங்கள் (Neutral Fertilizers)

இவ்வகை உரங்களை இடுவதால் நிலத்தில் அமிலத்தன்மையோ காரத்தன்மையோ ஏற்படுவதில்லை. உம். சூப்பர் பாஸ்பேட், பாறை பாஸ்பேட், கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு

உரமிடும் முறைகள்

மண்ணில் ஊட்டச்சத்தின் நிலை, பயிரிடும் முறை ஆகியவற்றைப் பொறுத்து உரமிடும் முறை நிர்ணயிக்கப்படுகிறது. மண்ணில் இடுதல் மற்றும் இலைவழி தெளித்தல் ஆகியவை இரு முக்கிய உரமிடும் முறைகளாகும்.

மண்ணில் இடுதல் (Soil Application)

இம்முறையில் பரந்து தூவுதல், குறிப்பிட்ட இடத்தில் இடுதல், பயிர் வரிசையில் இடுதல் உழவுசாலில் இடுதல், நீர்வழி இடுதல், அடிமண்ணில் இடுதல் மற்றும் அரைவட்டக்குழியில் இடுதல் ஆகியவை அடங்கும்.

பரந்து தூவுதல் (Broadcasting)

இது எல்லா பயிர்களுக்கும் சீரான அளவில் ஊட்டச்சத்துக்கள் கிடைத்திட வயல் பரப்பு முழுவதும் தூவும் முறையாகும். இம்முறையில் பெரும்பாலும் குருணை வடிவில் உள்ள உரங்கள் தூவப்படுகின்றன.

குறிப்பிட்ட இடத்தில் இடுதல்

பயிருக்கு அருகாமையில் குவியலாக உரம் இடப்படுகிறது. இதனால் பயிருக்குக் கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் உடனடியாகவும், முழுமையாகவும் கிடைக்கும். மேலும் உரம் வீணாவது குறைக்கப்படுகிறது.

பயிர் வரிசையில் இடுதல் (Band Application)

வரிசை விதைப்பு அல்லது நடவு மேற்கொண்டுள்ள பயிர்களில் வரிசைக்கருகில் இம்முறையில் உரமிடப்படுகிறது. இம்முறையில் அனைத்து பயிர்களுக்கும் சீரான அளவில் உரம் கிடைக்கும்.

உழவு சாலில் இடுதல் (Furrow Application)

உரங்களை அடியுரமாகப் பயன் படுத்தும்போது கலப்பைக்குப் பின்னால் உழவுசாலில் உரமிடப்படுகிறது. மேலும் இம்முறை வரிசை விதைப்பு அல்லது நடவு செய்யப்பட்ட பயிருக்கு மேலுரமிடவும் ஏற்றது.

நீர் வழி இடுதல் (Fertigation)

பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் பாசன நீர் மூலமாக இடப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் இம்முறைக்கு மிகவும் சிறந்தது.

அடிமண்ணில் இடுதல் (Sub-soil Placement)

பயிரின் வேர் வளர்ச்சியைத் தூண்டவும், ஊட்டச்சத்துக்கள் வீணாவதைத் தடுக்கவும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மண்ணின் அடி கண்டங்களில் உரமிடப்படுகிறது.

அரைவட்டக் குழியில் இடுதல் (PitApplication)

இது மரப்பயிர்களின் வேர்ப்பகுதியில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் அரைவட்ட வடிவ குழியை ஏற்படுத்தி ஊட்டச்சத்துக்களை இடும் முறையாகும்.

இலைவழி தெளித்தல் (Follar Application)

பயிரூட்டச் சத்துக்களை நீரில் கரைத்து தெளிப்பான்கள் மூலமாக இலைப்பரப்பில் படுமாறு தெளிக்கலாம். இம்முறையில் நேரடியாக இலைகள் சத்துக்களை எடுத்துக் கொள்வதால் வீணாவது குறையும். பொதுவாக நுண்ணூட்டச் சத்துக்களை பயிருக்குக் கொடுக்க இம்முறை ஏற்றது.

ஊட்டச்சத்து பற்றாக்குறை (Nutrient Deficiency)

பேரூட்டம் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பற்றாக்குறை ஏற்பட்டால் அவை பயிரில் அறிகுறிகளை ஏற்படுத்துவதுடன் விளைச்சலும் குறையக் காரணமாகிறது. ஊட்டச்சத்துக்களால் ஏற்படும் குறைபாடுகளைக் கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதன் மூலம் நல்ல பயிர் வளர்ச்சியைப் பெறுவதுடன் மண் வளத்தையும் காக்கலாம்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்

நைட்ரஜன் / தழைச்சத்து (N)


முதிர்ந்த இலைகளின் நுனி மஞ்சள் நிறமாகும். இலைகள் வெளிறிய பச்சை நிறத்தில் இருக்கும். மஞ்சள் நிறம் நடு நரம்பின் வழியாக காம்பை நோக்கி பரவும். பயிர்களின் அடியிலிருந்து மேல்நோக்கி இலைகள் உலரத் தொடங்கி, உதிர்ந்துவிடும். தானியப்பயிர்களில் தூர்களின் எண்ணிக்கை குறைவதால் விளைச்சல் குறையும்.


நிவர்த்தி செய்யும் முறை

  • 0.5-1 சத யூரியா கரைசலை இலைகள் மீது தெளிக்க வேண்டும். தழைச்சத்து உரங்களை அடியுரமாகவும், பயிரின் முக்கிய வளர்ச்சிப் பருவத்தில் மேலுரமாகவும் இடவேண்டும்.

  • தழைச்சத்து வீணாவதைத் தடுக்க மெதுவாகக் கிடைக்கக்கூடிய நிலையில் உள்ள உரங்களைப் பயன்படுத்தலாம். .ம். தார் பூசிய யூரியா, வேப்பம் புண்ணாக்கு கலந்த யூரியா)

பாஸ்பரஸ் / மணிச்சத்து (P)


இலை முழுவதும் அல்லது இலையின் ஓரங்கள் கத்திரிப்பூ நிறத்தில் காணப்படும். பயிரின் வளர்ச்சி குன்றி, முதிர்ச்சியடைதல் தாமதமாகும். கதிர்களில் மணிபிடிப்பு பாதிக்கப்படும்.


நிவர்த்தி செய்யும் முறை

பயிருக்குத் தேவைப்படும் மணிச்சத்தை அடியுரமாக இடவேண்டும். மண் ஆய்வுப்படி மணிச்சத்து உரமிடல் வேண்டும்.


பொட்டாசியம் / சாம்பல் சத்து (K)


பயிர் வளர்ச்சி குன்றி இலை நுனி மற்றும் விளிம்புகள் கருகி, சுருண்டு இருக்கும். புகையிலை, வாழை, பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களில் இச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் நன்கு தெரியும்.


நிவர்த்தி செய்யும் முறை

பயிருக்குப் பரிந்துரைக்கப்படும் சாம்பல்சத்தை அடியுரமாகவும், மண்ணின் தன்மைக்கேற்ப மேலுரமாகவும் இடவேண்டும்.


கால்சியம் (Ca)


இலை விளிம்புகளில் வெண்ணிறம் படர்ந்து காணப்படும்.


நிவர்த்திசெய்யும் முறை

சுட்ட சுண்ணாம்பு மண்ணில் இட்டு உழுதல் வேண்டும். கால்சியம் சத்துள்ள உரங்களைப் பயன்படுத்த வேண்டும். உம். சூப்பர் பாஸ்பேட், கால்சியம் அம்மோனியம் நைட்ரேட்டு


மெக்னீசியம் (Mg)

முதிர்ந்த இலைகளில் வெண்ணிறத் திட்டுகள், புள்ளிகள் தோன்றும். நரம்பிடைப் பகுதிகள் மஞ்சள் நிறமாகவும், நரம்புகள் பச்சையாகவும் இருக்கும். பருத்தி பயிரில் இலைகள் செந்நிறமாக மாற்றமடையும்.


நிவர்த்தி செய்யும் முறை

  • மெக்னீசியம் சத்து கொண்ட உரத்தை நிலத்திலிட வேண்டும்.

  • மெக்னீசியம் சல்பேட் 1 சத உப்புக் கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.

கந்தகம் (S)


பாதிக்கப்பட்ட பயிரின் இலைகளில் மஞ்சள் நிறம் படர்ந்திருக்கும். நரம்பிடை பாகங்களைக் காட்டிலும் நரம்புகள் வெளுப்பாக இருக்கும். பச்சையம் மற்றும் புரத உற்பத்தி குறைந்து வேர் மற்றும் பயிர் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது.


நிவர்த்தி செய்யும் முறை

கந்தகச் சத்துள்ள உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.


துத்தநாகம்

  • காரத்தன்மை மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள நிலங்களில் இச்சத்துப் பற்றாக்குறை அதிகமாகக் காணப்படும்.

  • இளம் இலைகள் மஞ்சள் நிறமாகும்.

நிவர்த்தி செய்யும்முறை

இரும்பு சல்பேட் அல்லது இரும்புக் குளோரைடு உப்பை நிலத்திலிடல் வேண்டும். 0.5-1.0 சத இரும்பு சல்பேட் கரைசலை இலைகள் மேல் தெளிக்கலாம். காரத்தன்மை உள்ள நிலங்களில் இரும்பு கீலேட்டுகளை (Fe-EDTA) இடலாம்.


துத்தநாகம் (Zn)


இலைகள் சிறுத்து பசுமை இழந்து விடும். பயிர் வளர்ச்சி தடைபடும். வேர்கள் நீரை உறிஞ்சாது.

வேர்களில் தடிப்புகள் தோன்றி, அதில் புதிய வேர்கள் தோன்றும். மக்காச்சோளப் பயிரில் வெள்ளை மொட்டு, இளம் மஞ்சள் கோட்டு நோய், குட்டை நோய், சூரியகாந்தியில் இலை அடுக்குநோய். நெற்பயிரில் கைரா நோய் போன்றவை இச்சத்து பற்றாக்குறையால் தோன்றும்.


நிவர்த்தி செய்யும்முறை

துத்தநாக சல்பேட் உரத்தை அடியுரமாக நிலத்தில் இடவேண்டும். 0.5 சத துத்தநாக சல்பேட் கரைசலை இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.


மாங்கனீசு


இளம் தளிர்களில் இலைகள் வெளிறி, நரம்புகள் பச்சையாகி நரம்பிடைப்பகுதி மஞ்சள் நிறமாகும். சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ள நிலங்களில் இப்பற்றாக்குறை ஏற்படும். ஒட்ஸ் பயிரில் சாம்பல் புள்ளி நோய், சர்க்கரைக்கிழங்கில் மஞ்சள் புள்ளி நோய் மற்றும் கரும்பில் பஹாலா கருகல் நோய் ஆகியவை இதன் குறைபாட்டால் ஏற்படும்.


நிவர்த்தி செய்யும்முறை

0.2-10 சத மாங்கனிஸ் சல்பேட் கரைசலை இலைகளில் தெளிக்க வேண்டும்.

தாமிரம்

பயிரின் குருத்து கருகி, அதன் அடியில் பல குருத்துகள் தோன்றி கருகும். தானியப் பயிர்களில் வெள்ளை இலை நுனி நோய், குதிரை மசால் பயிரில் - இலை சுருட்டு நோய் மற்றும் எலுமிச்சையில் எலிவால் அமைப்பு நோய் ஆகியவை இதன் பற்றாக்குறையால் ஏற்படும்.


நிவர்த்தி செய்யும்முறை

  • எக்டருக்கு 1-15 கிலோ தாமிர சல்பேட்டை நிலத்தில் இட்டு உழவேண்டும்.

  • 0.2 சத தாமிர சல்பேட் மற்றும் சுண்ணாம்பு ஆகியவற்றை நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.

போரான்

  • பழவகை மரங்களிலும், காய்கறிச்செடிகளிலும் வளரும் இளந்திசுக்கள் கருகும்.

  • கிளை மற்றும் தளிர்களின் வளர்ச்சி குன்றி, காய்ந்து, கருகிவிடும்.

  • தசைப்பற்றுள்ள திசுக்களின் உள்பாகம் செந்நிறமாகும்.

  • மகரந்தச்சேர்க்கை தடைபடும்.

  • சாகுபடிப் பயிர்களில் இலை நரம்பு உடைதல்,

  • நரம்பு பெருத்தல்,

  • ஆப்பிள் நடுட்திசுக்கள் கருப்பு நிறமாதல் (Corking),

  • தென்னை குரும்பை உதிர்தல் (Button shedding)

ஆகியவை இதன் பற்றாக்குறையால் ஏற்படும்.


நிவர்த்தி செய்யும்முறை

எக்டேருக்கு 10-25 கிலோ போராக்ஸை நிலத்திலிட்டு மண்ணுடன் கலக்க வேண்டும். 0.2 சத போராக்ஸ் கரைசலை இலை மீது தெளிக்கலாம்.


மாலிப்டினம் (Mo)


பயிர்கள் வெளுத்து வளர்ச்சி குன்றிவிடும். காலிபிளவர் பயிரில் விப்டெய்ல் (Whip tai) என்னும் நோய் இதன் பற்றாக்குறையால் ஏற்படும்.


நிவர்த்தி செய்யும்முறை

எக்டருக்கு 0.5 கிலோ சோடியம் அல்லது அம்மோனியம் மாலிப்டேட் உப்பை மண்ணில் இடவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

பயிருக்கு சரியான அளவில் அங்கக, அனங்கக மற்றும் உயிர் உரங்களை இட்டு, ஊட்டச்சத்து இழப்பைக் குறைத்து, ஊட்டச்சத்தின் பயன்பாட்டு திறனை அதிகரிப்பதே ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை எனப்படும். பயிர், நீர் மற்றும் நில மேலாண்மையுடன் ஊட்டச்சத்து மேலாண்மை செய்து நிலையான உற்பத்தியை அதிகப்படுத்துவதே ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையின் நோக்கமாகும்.


கீழ்க்கண்ட நுட்பங்களை அறிந்து கொண்டு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை திறம்பட மேற்கொள்ளலாம்.

  • மண் ஆய்வு மேற்கொண்டு மண்ணின் ஊட்டத்திறனை அறிதல்

  • மண் ஆய்வின்படி உரமிடுதல்.

  • மண்வள அட்டையைப் பயன்படுத்துதல்.

  • உரப்பரிந்துரைக்கான மென்பொருளை பயன்படுத்துதல்

  • அங்கக உரங்களான தொழு உரம், பிண்ணாக்குகள், பசுந்தாள், பசுந்தழை மற்றும் உயிர் உரங்களை மண்ணில் இட்டு மண்ணின் பெளதீக, இரசாயனத் தன்மையை சீர்செய்தல்

  • உரங்களை சிபாரிசு செய்யப்பட்ட அளவில், சரியான முறையில், தக்க தருணத்தில் இடுதல்

  • இரசாயன உரங்களை பயிரின் வளர்ச்சிப் பருவத்திற்கேற்றாற்போல் மேலுரமாக பிரித்து அளித்தல்

  • ஊட்டச்சத்து வீணாவதை தடுக்க மெதுவாக கரையும் வகையில் உள்ள உரங்களை இடுதல்

  • ஊட்டச்சத்தின் பயன்பாட்டு திறனை அதிகரிக்க நீர்வழி மற்றும் அடிமண்ணில் உரமிடுதல்.

ஊட்டச்சத்து பயன்படுதிறன் (Nutrient Use Efficiency)

பயிருக்கு இடப்பட்ட ஊட்டச்சத்தின் அளவிற்கும், பயிரால் பயன்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து அளவிற்கும் உள்ள விகிதமே ஊட்டச்சத்து பயன்படுதிறன் எனப்படும்.

  • ஊட்டச்சத்தின் பயன்படுதிறனை அதிகரிக்கும் வழிமுறைகள்

    மண்ணின் ஊட்டச்சத்து நிலை அறிந்து உரமிடவேண்டும்.

  • மண்ணில் ஊட்டச்சத்து குறைநிலையில் உள்ளபோது சிபாரிசு செய்யப்பட்ட அளவில் 25 சதம் அதிகமாகவும், அதிக நிலையில் உள்ளபோது 25 சதம் குறைவாகவும் உரமிடவேண்டும்.

  • ஊட்டச்சத்து பயன்படுதிறனை சொட்டு நீர் மற்றும் நீர்வழி உரமிடுதல் மூலம் அதிகரிக்கலாம்.

  • பரிந்துரைக்கப்பட்ட உர அளவில் 50 சதத்தை அடி உரமாகவும், 25 சதம் வீதம் இரண்டு மேலுரமாக இட்டு உரபயன்படு திறனை அதிகரிக்கலாம்.

  • மெதுவாக கரையக்கூடிய பூச்சு செய்யப்பட்ட யூரியாவை பயன்படுத்தி தழைச்சத்தின் பயன்படுதிறனை அதிகரிக்கலாம். எளிதில் கரையாத ராக் பாஸ்பேட்டை பயன்படுத்தி மணிச்சத்தின் பயன்படு திறனை அதிகரிக்கலாம்.

  • இரசாயன உரங்களை தொழுஉரம் மற்றும் பசுந்தாள் உரங்களுடன் சேர்த்து இடலாம்.

  • உயிர் உரங்களான அசோலா, நீலப்பச்சைப்பாசி, அசோஸ்பைரில்லம், ரைசோபியம் ஆகியவற்றுடன் இரசாயன உரங்களைக் கலந்து இடலாம்.

  • மணிச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் பயன்படு திறனை அதிகரிக்க அவற்றை ஊட்டமேற்றிய தொழுஉரத்துடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

    • நன்மைகள்

      உரம் வீணாவது குறைக்கப்படுகிறது.

    • உரச்செலவு குறைவதால், உற்பத்தி செலவு குறைந்து லாபம் அதிகரிக்கிறது.

    • சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதில்லை.

    • மண்வளம் காத்து, மண்ணின் உற்பத்தித் திறனை அதிகரிக்கலாம்.


    Post a Comment

    0 Comments